சமுத்திரம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

தஞ்சை அருகே சமுத்திரம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-27 14:06 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பகுதியில் தஞ்சை- நாகை சாலையில் உள்ளது சமுத்திரம் ஏரி. இந்த ஏரி நாயக்க மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் சமுத்திரம் ஏரி என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 800 ஏக்கர் ஆகும். தற்போது இந்த ஏரி சுருங்கி காணப்படுகிறது.

இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகிறது. மேலும் தஞ்சை நகரின் வடிகாலாகவும் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியின் குறுக்கே தான் தஞ்சை புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்ற தஞ்சை- விக்கிரவாண்டி சாலை திட்டமும் இந்த ஏரியில் இருந்து தான் தொடங்குகிறது.

மீன்கள் செத்து மிதந்தன

இந்த ஏரி சமீபத்தில் பெய்த மழை மற்றும் கல்லணைக்கால்வாயில் இருந்து வந்த தண்ணீர் மூலம் நிரம்பி காட்சி அளிக்கிறது. இந்த ஏரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன. இந்தநிலையில் நேற்று காலை ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. பல இடங்களில் இறந்த மீன்கள் கரை ஒதுக்கிய நிலையில் காணப்பட்டது.

இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து சென்றனர். ஏரியில் உள்ள சகதி பகுதியில் இந்த மீன்கள் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்