நெய்க்காரப்பட்டி பகுதியில் அழிவின் விளிம்பில் அச்சுவெல்ல தயாரிப்பு தொழில்
பழனியை அடுத்த நெய்க் காரப்பட்டி பகுதியில், அழிவின் விளிம்பில் அச்சுவெல்ல தயாரிப்பு தொழில் சென்று கொண்டிருக்கிறது.
நெய்க்காரப்பட்டி,
ஒவ்வொரு ஊரையும் அடையாளப்படுத்தும் வகையில் அதற்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் திண்டுக்கல்லுக்கு பூட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம், நெல்லைக்கு அல்வா என்று அடுக்கி கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பது பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி. இந்த ஊரின் பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லம் தான். தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் இங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லத்துக்கு மவுசு அதிகம்.
அச்சுவெல்லம் தயாரிப்புக்கு அடித்தளமிடும் வகையில், நெய்க்காரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கரும்பு சாகுபடியும் களை கட்டி வருகிறது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வயல்களிலேயே ஆங்காங்கே அச்சுவெல்ல தயாரிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நெய்க்காரப்பட்டியில் உற்பத்தியாகும் அச்சுவெல்லம், அங்குள்ள சந்தைகளிலேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் தமிழக-கேரள வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு வெல்லத்தை வாங்கி செல்வர். குறிப்பாக நெய்க் காரப்பட்டி அச்சுவெல்லத்துக்கு, கேரள மாநிலம் ஒரு பெரிய வர்த்தக மையமாக திகழ்ந்தது என்றே கூறலாம்.
ஆனால் இன்றையநிலை தலைகீழாக மாறி விட்டது. நெய்க்காரப்பட்டி பகுதியில், அச்சுவெல்ல தயாரிப்பு தொழில் அழிவின் விளிம்பில் சென்று கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் கரும்பு சாகுபடியும் குறைந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளாக வெல்ல உற்பத்திக்கூடங்கள் மற்றும் விற்பனை சந்தைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனை நம்பி உள்ள ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர்.
நெய்க்காரப்பட்டியில், தற்போது 2 வெல்ல சந்தைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் குறித்து வெல்ல சந்தை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அச்சுவெல்ல உற்பத்தியில் பெரும்பாலும் விவசாயிகளே ஈடுபட்டனர். ஒவ்வொரு புதன், சனிக்கிழமைகளில் நெய்க்காரப்பட்டியில் நடைபெறும் ஏலத்தில் உடுமலை, பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அச்சுவெல்லம் கொண்டு வரப்படும்.
இதில், ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு அச்சுவெல்லத்தை விலைக்கு வாங்கி செல்வார்கள். ஒரு நாளைக்கு 7 ஆயிரம் சிப்பம் (ஒரு சிப்பம் என்பது 30 கிலோ) வரை வெல்லம் விற்பனை செய்யப்படும். ஒரு சிப்பம் வெல்லம், ரூ.1000 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் வரை கலப்படம் இன்றி சுத்தமாக இருந்தது. ஆனால் தற்போது வெல்லம் தயாரிப்பு தொழில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வசம் சென்று விட்டது. இதனால் வியாபாரிகள் சிலர், லாபநோக்கத்துடன் வெல்லத்தில் கலப்படம் செய்ய தொடங்கி விட்டனர். இதனால் விற்பனை மந்தமாகி விட்டது.
குறிப்பாக நிறமூட்டிகள், ரசாயனம், சூப்பர் பாஸ்பேட், சோடா ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கினர். இதன் விளைவாக அச்சுவெல்ல ஏற்றுமதி குறைந்தது. தரமான வெல்லத்துக்கும், கலப்பட வெல்லத்துக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுஒருபுறம் இருக்க, விவசாயிகளிடம் இருந்து வெல்லத்தை சந்தை உரிமையாளர்கள் ஏல முறையில் கொள்முதல் செய்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.
ஏலம் எடுத்தபோதே விவசாயிகளிடம் பணத்தை பட்டுவாடா செய்துவிடுவோம். ஆனால் வியாபாரிகள் உடனடியாக பணம் கொடுப்பதில்லை. ஓரிரு மாதங்கள் கழித்தே பணத்தை கொடுக்கின்றனர். சிலசமயத்தில் விற்பனை சரியாக இல்லை என்று கூறி இழுத்தடித்து விடுகின்றனர். மேலும் கொள்முதல் செய்த வெல்லத்தில் கலப்படம் என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதேபோல் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிற வெல்லத்தில் கலப்படம் செய்வதாக கேரள மாநிலத்தில் தகவல் பரவியது. மேலும் அதனை பயன்படுத்தினால், பல்வேறு நோய்கள் ஏற்படும் என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அச்சுவெல்ல விற்பனை நாளுக்குநாள் குறைந்து கொண்டிருக்கிறது.
வெல்லசந்தைகள் மூடப்பட்டு ஆடுகள் பராமரிக்கும் இடமாகவும், விளைநிலங்களாகவும் மாறி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.