விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 212 பேருக்கு கொரோனா - தொழிலாளி பலி
விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 212 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவரும் பலியானார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19,215 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 17,377 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 207 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 212 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இவர்களில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மங்களூரை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூரை சேர்ந்த 3 பேர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 80 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 127 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 19,427 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் 56 வயது தொழிலாளி. சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 276 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் மொத்தம் 1,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,436 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், 130 பேர் வெளிமாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,450 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.