உளுந்தூர்பேட்டையில் இருந்து கர்நாடகாவிற்கு லாரியில் 17½ டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டையில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 17½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-26 22:15 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாத்தனூர் பகுதியில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா, ஏட்டுகள் பிரபு, பாண்டியன் மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை சாத்தனூர் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து 7 பேர் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்ற 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து, அந்த லாரி மற்றும் கோழிப்பண்ணையை போலீசார் சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 350 மூட்டைகளில் 17,500 கிலோ (17½ டன்) ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.

அதில், அவர்கள் இருவரும், விழுப்புரம் கமலா நகரை சேர்ந்த முன்னாள் நகரமன்ற கவுன்சிலரான இப்ராகிம் சுகர்னா (வயது 43), திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த லாரி டிரைவரான சரவணன் (37) என்பதும், இவர்கள் உள்பட 7 பேரும் சேர்ந்து உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ரேஷன் கடைகளில் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அரிசியை வாங்கி அதனை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக லாரி மூலம் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இப்ராகிம் சுகர்னா, சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 17½ டன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் போலீசார் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து கைதான இப்ராகிம்சுகர்னா, சரவணன் ஆகிய இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த அரிசி கடத்தலில் தலைமறைவான பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இப்ராகிம்சுகர்னா மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்