தரிசுநிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பெடி ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்ட பணிகளை அரசின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பெடி நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை வேளாண் உற்பத்தி ஆணையரும் அரசின் முதன்மை செயலருமான ககன்தீப் சிங் பெடி நேற்று முன்தினம் நேரில் வந்து ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு தொகுப்பு இனத்தில் 5 வருடங்களுக்கு மேல் தரிசாக உள்ள நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 325 எக்டேர் தரிசு நிலங்களில் குதிரைவாலி, சோளம், கம்பு பயறு வகைகள் மற்றும் எள் பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை பிடுங்கி அகற்றுவதற்கும், முட்கள் மற்றும் புதர்களை நீக்குவதற்கும், வயலை சமப்படுத்துவதற்கும் உழவுப்பணி மேற்கொள்வதற்கும், விதைவிதைக்கும் கருவி மூலம் விதைப்பதற்கும், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் வழங்குவதற்கும் 50 சதவீதம் மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதன்படி தரிசுநிலங்கள் விளைநிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டத்தினை அரசு செயலாளர் ககன்தீப்சிங்பெடி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் வட்டாரம் பழங்குளம் கிராமத்தில் அமிர்தம் என்பவரின் மகன் தியாகராஜன் என்ற விவசாயி 5 ஏக்கர் தரிசு நிலத்தில் கருவேல மரங்களை வேருடன் அகற்றி சமப்படுத்தி உழுது குதிரைவாலி பயிர் விதைப்பதற்கு தயார் நிலையில் உருவாக்கி வைத்துள்ளார். இந்த விவசாய நிலத்தினை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பெடி பார்வையிட்டு விதையிடும் கருவி மூலம் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன், துணை இயக்குனர்கள் சேக் அப்துல்லா, பாஸ்கரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளும் கலந்துகொண்டனர்.