கொரோனாவுக்கு இதுவரை 500 பேர் உயிரிழப்பு பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது

புதுவையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-09-27 00:33 GMT
புதுச்சேரி,

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 32 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 555 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 424 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 6 பேர் உயிரிழந்தனர்.

அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாணரப்பேட்டை நேரு வீதியை சேர்ந்த 59 வயது ஆண், எல்லைப்பிள்ளைசாவடி சித்தானந்தா நகரை சேர்ந்த 89 வயது மூதாட்டி, நீடராஜப்பையர் வீதியை சேர்ந்த 60 வயது முதியவர், ஜிப்மரில் நெல்லித்தோப்பு முத்தமிழ்நகரை சேர்ந்த 71 வயது முதியவர், காட்டுக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்த 50 வயது ஆண், நோணாங்குப்பம் பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்த 47 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 54 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 26 ஆயிரத்து 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்து 327 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,875 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 452 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்து 205 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சாவு எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 425 பேர் புதுச்சேரி பகுதியையும், 34 பேர் காரைக்காலையும், 41 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். பலி எண்ணிக்கை 1.92 சதவீதமாகவும், குணமடைவது 77.62 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்