புரட்டாசி 2-வது சனிக்கிழமை: கோட்டை பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள்

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி கோட்டை பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2020-09-26 23:57 GMT
ஈரோடு, 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபட்டால் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். இந்த நிலையில் நேற்று 2-வது சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள கோட்டை பெருமாள் கோவிலில் (கஸ்தூரி அரங்கநாதர்) நடை நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். மேலும் ஸ்ரீதேவி -பூதேவிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோட்டை பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றி காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் சாமி திருவீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதர் தேரில் எழுந்தருள்கிறார். 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக தேரை இழுத்து செல்ல 100 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்