ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, காட்டழகர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டழகர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு உள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டழகர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
அந்தவகையில் நேற்று 2-வது புரட்டாசி சனிக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இந்தநிலையில் கோவிலுக்கு செல்லும் பாதையில் வனப்பகுதியில் வனத்துறையினர் நின்று கொண்டு காட்டுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுத்தனர்.
இந்த கோவிலை பொறுத்தவரை வனப்பகுதிக்குள் 7 கிலோ மீட்டர் நடந்து சென்று சென்று தான் சாமி தரிசனம் செய்ய முடியும். இந்தநிலையில் வனப்பகுதியில் திடீரென வனத்துறையினர் பக்தர்களை அனுமதிக்க மறுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
நேரம், நேரம் ஆக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணிநேரத்திற்கு பிறகு வனத்துறையினர் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் பெரிய அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களை நிறுத்தி வைத்திருந்தோம் என கூறினர்.