நாகர்கோவிலில், வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் மறியல்; 65 பேர் கைது
வேளாண் மசோதாவுக்கு எதிராக நாகர்கோவிவில் சாலை மறியலில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட் கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதன்படி குமரி மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில்சிங், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரெகுபதி மற்றும் கண்ணன், ஆறுமுகம் பிள்ளை உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது டெரிக் சந்திப்பு சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு இன்ஸ்பெக்டர்கள் சாய்லட்சுமி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனர்.
போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றி, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.