திருப்பூர் மாவட்டத்தில், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் மறியல் - 29 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் புதிய வேளாண் மசோதாக்களை ரத்துசெய்யக்கோரி 7 இடங்களில் நடத்திய சாலை மறியலில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-26 06:15 GMT
திருப்பூர்,

விவசாயிகளை சீரழிக்கும் 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க., மாநில அ.தி.மு.க. அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) மாவட்ட செயலாளர் சின்னசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி மாநகர செயலாளர் ஜீவா கிட்டு ஆகியோர் தலைமை தாங்கினர். உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

முன்னதாக திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வரை வந்தனர். அதன் பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன் குமார் தலைமையிலான தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட 29 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இதுபோல் ஊத்துக்குளி, அவினாசி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி ஆகிய 6 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

மேலும் செய்திகள்