ராணிப்பேட்டையில், விவசாய சங்கத்தினர் சாலை மறியல் - 10 பெண்கள் உள்பட 70 பேர் கைது
ராணிப்பேட்டையில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு சட்டம் 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020, ஆகிய 3 விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 70 பேரை நேற்று ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.