வீட்டு மாடியில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்த பட்டதாரி பெண்

காரைக்குடி அருகே இயற்கை உரம் மூலம் வீட்டு மாடியில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து பட்டதாரி பெண் ஒருவர் அசத்தி உள்ளார்.

Update: 2020-09-25 22:15 GMT
காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ளது அரியக்குடி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர் எம்.எஸ்.சி, பிட் பட்டம் படித்து விட்டு இல்லத்தரசியாக உள்ளார். இவர் தனது வீட்டில் ஓய்வு நேரங்களில் பழச் செடிகளை வைத்து பராமரித்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து அதில் ஆரஞ்சு, பன்னீர் திராட்சை, சீத்தாபழம், சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட செடிகளை பராமரித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டு மாடியில் பந்தல் அமைத்து அதில் திராட்சை செடி வளர்த்தார். இந்த செடிகளுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் காய்கறி கழிவுகள், மாட்டு சாணம், தேங்காய் நார் கழிவுகள், ஆட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டும் வைத்துள்ளார். தற்போது இவர் வைத்துள்ள பன்னீர் திராட்சை செடிகள் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது.

இதுகுறித்து கவிதா கூறியதாவது:-பட்டப்படிப்பு படித்துள்ள நான் வீடுகளில் அன்றாட வேலைகளை தவிர மற்ற நேரங்களில் பொழுதை போக்க விரும்பாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது.

வீட்டின் மாடியில் இயற்கை முறையில் செடிகள், பழங்கள் தரும் மரங்களை வைத்து பராமரித்து வருகிறேன். மலைப்பிரதேசமான தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிகஅளவில் பன்னீர் திராட்சை செடிகள் வளருவது வழக்கம். இருந்தாலும் திராட்சை செடியை வீட்டு மாடியில் நடவு செய்தேன். இந்த திராட்சை காய்த்து அறுவடை செய்து வருகிறேன்.

இதுவரை 20 கிலோ வரை அறுவடை செய்து வீட்டு தேவை போக எனது உறவினர்களுக்கும், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன். வீடுகளில் படித்து முடித்து விட்டு இருக்கும் பெண்கள் பொழுதை அறிவியல் சார்ந்த சாதனங்களில் செலவு செய்யாமல் இதுபோன்று செடிகளை வைத்து பராமரித்து வந்தால் அவை வீட்டின் அன்றாட தேவைக்கு பயன்படும் வகையில் அமையும். அடுத்ததாக வீட்டின் மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்