உசிலம்பட்டி அருகே சோகம்: 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை
உசிலம்பட்டி அருகே 6 மாத பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி எம்.புதூரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 26). இவர் வெளிமாநிலத்துக்கு சென்று முறுக்கு மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், வாலாந்தூர் அருகே உள்ள பாண்டியன்நகரை சேர்ந்த முத்தையா மகள் லட்சுமிக்கும்(23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை பிரிந்த லட்சுமி, பாண்டியன்நகரில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்வது என விபரீத முடிவு எடுத்துள்ளார். தனக்கு பிறகு குழந்தை அனாதையாகி விடுமே என்று கருதிய அவர், குழந்தைக்கு நேற்று முன்தினம் இரவில் விஷத்தை கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷத்தை குடித்தார்.
சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக லட்சுமி மற்றும் குழந்தையை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து லட்சுமியின் தந்தை முத்தையா கொடுத்த புகாரின் பேரில் வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமாரும் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
பெற்ற குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் வாலாந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.