மாவட்டத்தில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழை சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசாக மழை பெய்வது உண்டு. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புதுக்கோட்டையில் நேற்று காலை வெயில் கொஞ்சம் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை மாலை 5 மணி வரை ஒரே சீராக பெய்து கொட்டித்தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீரோடு மழை நீர் கலந்தோடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்தது. பெரியார்நகர், மேல 4-ம் வீதி கடை வீதிகளில் ஒரு சில கடைகளில் மழை நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகள் இருந்த வீடுகள் முன்பு நிறுத்தியிருந்த வாகனங்கள் மழைநீரில் சிக்கிக்கொண்டன.
புதுக்கோட்டை மேல 4-ம் வீதியில் ஒரு கடை முன்பு மழை நீர், கழிவுநீரோடு கலந்து சூழ்ந்தது. அந்த சாலையில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. அதே சாலையில் ஒரு தட்டு ரிக்ஷா வண்டி, ஸ்கூட்டர் மழைநீரில் சிக்கிக்கொண்டது. போலீசார் சார்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கீழே விழுந்து கிடந்தது. மாலை 5 மணிக்கு மேல் மழை தூறியபடி இருந்தது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காணப்பட்டது. மழை நின்ற பிறகு மாலை 5 மணிக்கு மேல் புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே மின்சார தடை ஏற்பட்டது. அதன் பின் மாலை 6 மணிக்கு மின்சார வினியோகம் சீரானது. எனினும் தொடர்ந்து அவ்வப்போது, மின்தடை ஏற்பட்டது.
திருவரங்குளம், பூவரசகுடி, வல்லக்தராகோட்டை, கத்தக்குறிச்சி, குளவாய்பட்டி, கொத்தகோட்டை, மாஞ்சான்விடுதி, காயாம்பட்டி, வம்பன் நாலுரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் மேலத்தானியம், கீழத்தானியம், கொன்னையம்பட்டி, சடையம்பட்டி, அரசமலை, நல்லூர், காரையூர் உட்பட சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
திருமயம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான அரசம்பட்டி, மேலூர், ஊனையூர், கடியாபட்டி, லட்சுமிபுரம் லேனாவிளக்கு, ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது ஊரணி மற்றும் குளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் திருமயம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம், கே புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, கல்லூர், நமணசமுத்திரம், நெடுங்குடி, கடியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. தற்போது, நடவு பணி நடைபெற்று வருவதால் இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கந்தர்வகோட்டையில் நேற்று மாலையில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஆதனக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.