ராமநத்தம் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதல்; 2 நண்பர்கள் பலி - 4 பேர் படுகாயம்

ராமநத்தம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2020-09-25 14:15 GMT
ராமநத்தம்,

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜா மகன் ரகு(வயது 30). இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் முத்துக்குமரன்(30), பிரான்சிஸ், தினேஷ், பிரபு ஆகியோர் நேற்று திருச்சிக்கு காரில் சென்றனர். அங்குள்ள அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பர் ஒருவரை பார்த்து விட்டு, அதே காரில் அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இவர்களது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, எதிரே ரகு மற்றும் அவரது நண்பர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ரகு உள்ளிட்டோர் வந்த கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ரகு, முத்துக்குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தினேஷ், பிரான்சிஸ், பிரபு, மற்றொரு காரில் வந்த பாஸ்கரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான ரகு, முத்துக்குமரன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்