ஒரே நாளில் 514 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: கடலூரில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - கர்ப்பிணிகள் உள்பட 250 பேருக்கு தொற்று உறுதி

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 514 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியான நிலையில், கர்ப்பிணிகள் உள்பட 250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-09-25 13:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18 ஆயிரத்து 704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், புதிதாக 250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சென்னையில் இருந்து கடலூர் வந்த ஒருவர், குமராட்சி, கம்மாபுரத்தை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரை சேர்ந்த ஒருவர், கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 115 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 131 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 954 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 514 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 953 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 204 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 2 பேர் பலியானார்கள். இதன் விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 80 வயது முதியவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 60 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொரோனா பாதித்த 1649 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 146 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3071 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் வரை 96 கட்டுப்பாட்டு பகுதிகளாக இருந்த நிலையில், தற்போது 103 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்