உளுந்தூர்பேட்டை அருகே, தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி ஜோதிடர் உள்பட 2 பேர் பலி - மேலும் ஒருவர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஜோதிடர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் பாலாஜி(வயது 55) ஜோதிடர். இவரும், இவரது நண்பர்களான சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகவேல்(57) மற்றும் தி.நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராமன்(49) ஆகியோரும் திருநெல்வேலியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று அதிகாலை சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். காரை முருகவேல் ஓட்டினார்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் அருகே கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த முருகவேல் மற்றும் ஜோதிடர் சாய் பாலாஜி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுந்தர்ராமன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த எடைக்கல் போலீசார் சுந்தர்ராமனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான முருகவேல் மற்றும் சாய் பாலாஜி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.