கோத்தகிரி அருகே, வீடுகட்ட இடம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு

வீடுகட்ட இடம் வழங்கக்கோரி கோத்தகிரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2020-09-25 09:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள சன்சைன்நகர் ஊர் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அம்மன்நகர் ஊர் தலைவர் சுதாகர் ஆகியோர் தலைமையில் அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோத்தகிரி டானிங்டன், கரும்பாலம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த சுமார் 160 குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், வருவாய்த்துறை சார்பில் அவர்களுக்கு எஸ்.கைகாட்டி கிராமத்திற்கு அருகே உள்ள சன்சைன் நகர் பகுதியில் வீடு கட்டுவதற்காக தலா 1½ சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் அந்த இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

தற்போது குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போதிய இடவசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே வீடுகள் இல்லாதவர்களுக்கு சன்சைன் நகர் அருகே உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், வீடு கட்டுவதற்காக நிலத்தை ஒதுக்கி, மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையினரும் அனுமதி அளிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். ஆனால் அதை ஏற்காத கிராம மக்கள் தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்