திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் மேலும் ஒரு பெண் இறந்ததாக கலெக்டரிடம் புகார்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் மேலும் ஒரு பெண் இறந்ததாக கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-24 17:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருப்பூர் அரசு மருத்துவ மனையில் கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் நேற்று முன்தினம் 40 நிமிடம் மின்தடை ஏற்பட்டது. அப்போது அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் முருகானந்தபுரத்தை சேர்ந்த 67 வயது பெண், வெங்கடேசபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் என 2 பேர் இறந்தனர். இவர்கள் 2 பேரின் இறப்புக்கு மின்தடைதான் காரணம் என்று அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் மின்தடையால் மேலும் ஒரு பெண் இறந்ததாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் பூலுவபட்டி மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது பெரியம்மா அனுராதா (வயது 45). தள்ளுவண்டியில் பலகாரம் போட்டு அன்றாடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். பெரியப்பா தண்டபாணி 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குடும்பத்தின் சுமையை, எனது பெரியம்மாவே கவனித்து வந்தார். எனது பெரியம்மாவுக்கு 3 மகள்கள். இந்நிலையில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதி ஆஸ்துமா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அங்கிருந்த நிலையில், கடந்த 21-ம் தேதி பெரியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) காலை முதல் மின்சாரம் தடை ஏற்பட்டதால், செயற்கை சுவாசக்கருவி செயல்படவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மூச்சுத்திணறலை சந்தித்து வந்தார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தபோதும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தார். மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது “ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் போதிய அளவில் உள்ளன. ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என தெரியவில்லை. இறந்த அனுராதா எந்த அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்