கம்பத்தில், கேரளாவுக்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 வாகனங்களுடன் 2 பேர் கைது
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 176 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வீரபாண்டியில் இருந்து 80 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு கஞ்சாவை கொண்டு வந்து, பின்னர் அங்கிருந்து கம்பம்மெட்டு வழியாக அதனை கேரளாவுக்கு கடத்தப்பட உள்ளதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் தலைமையிலான போலீசார் கம்பம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்றும், அதற்கு பின்னால் மினி வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவை அடுத்தடுத்து வந்தன. இதனால் அந்த 3 வாகனங்களையும் போலீசார் நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் தப்பியோடினர். அதில் 2 பேரை போலீசார் பிடித்தனர். 3 பேர் தப்பியோடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட கார் மற்றும் மினிவேனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவற்றில், 176 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 45), விவேகானந்தர் தெருவை சேர்ந்த குபேந்திரன் (37) என்பதும், தப்பியோடியவர்கள் கம்பத்தை சேர்ந்த மலைச்சாமி, கண்ணன், காளிராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவுக்கு கஞ்சாவை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து வேல்முருகன் மற்றும் குபேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 176 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மினி வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மலைச்சாமி, கண்ணன், காளிராஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.