கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்
கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கர்நாடகத்தில் மேலும் சில நாட்கள் பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 72 மணி நேரத்துக்கும், சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்துக்கும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 204 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, பீதர், தார்வார், கதக், கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி மற்றும் தென்கர்நாடக மாவட்டங்களான சாம்ராஜ்நகர், தாவணகெரே, மண்டியா, மைசூரு ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.