சூலூரில் விபத்தில் சிக்கியவர்கள் செல்போன் திருடர்கள் - மற்றொரு சம்பவத்தில் 4 பேர் சிக்கினர்
சூலூரில் விபத்தில் சிக்கியவர்கள் செல்போன் திருடர்கள் என்று தெரியவந்தது. மற்றொரு சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்,
சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவு சாலையில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள்மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று எதிரே வந்த மொபட்டின் மீது வேகமாக மோதினர். இதில் மொபட்டை ஓட்டி வந்த சூலூர் அடுத்த வடுகன்பாளையம் பகுதியை சேர்ந்த துலாம் ரசூல் (வயது 44) மற்றும் பின்னால் இருந்த அவரது மனைவி அமினா பானு (33) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், விபத்தில் சிக்கிய 2 பேரிடம் 6 செல்போன்கள் இருந்ததால், செல்போன் திருடர்கள் என சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த 2 பேரும் கோவைஆத்துப்பாலம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் அலி (20) மற்றும் அனிஷ் (18) என தெரியவந்தது. இந்தநிலையில், அவர்களுக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டதால் 2 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் இந்த 2 வாலிபர்களும், பூராண்டான்பாளையம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (38) என்பவரின் செல்போனை பறித்துச்சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் செல்போன் திருடர்களாக வலம் வந்தது தெரியவந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் செல்போன் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போல் கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தெலுங்குபாளையம் ரோட்டில் சென்றபோது, 3 வாலிபர்கள் கருணாகரனிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம்போட்டார். பொதுமக்கள் ஓடிவந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்ற 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பிடிபட்ட வாலிபரை பொதுமக்கள் செல்வபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) என்றும், மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கார்த்திக் கொடுத்த தகவலின் பேரில், தப்பிச்சென்ற 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் மாதேஷ் (19). கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது 2 செல்போன்களும் திருட்டு போனது. புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெற்றிவேல் (28) என்பவரை கைது செய்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.