திருச்சியில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த மாணவன் காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை

திருச்சியில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த மாணவன் காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-09-20 01:45 GMT
கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர். சுந்தர் நகரை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். உடையான்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன் பிளஸ்-2 படித்து வருகிறார். இருவரும் சுப்பிரமணியபுரம் தேர்வு மையத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத சென்றனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. மாணவன் அடிக்கடி தொல்லை கொடுத்ததால் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் மாணவி வீட்டார் சார்பில் கடந்த மே 19-ந் தேதி புகார் அளிக்கப்பட்டது.

மாணவி தற்கொலை

கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் மாணவனை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் ஜாமீனில் வெளியே வந்தார். இதை அறிந்த மாணவி, மாணவனுக்கு திடீரென போன் செய்து, இப்போதும் உன்னை தான் காதலிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவன் ஏற்கனவே உன்னால் தான் சிறைக்கு சென்று வந்துள்ளேன் என கூறி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்