கடப்பாக்கம் அருகே பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெட்டிக்கொலை உறவினர்கள் மறியல்

கடப்பாக்கம் அருகே பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-20 00:07 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோவைப்பாக்கத்தை சேர்ந்தவர் அரசு என்கிற ராமச்சந்திரன் (வயது 50). அ.தி.மு.க.வை சேர்ந்தவர். பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர். ராமச்சந்திரன் நேற்று கடப்பாக்கத்தை அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மர்ம நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஷ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராமச்சந்திரனின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கடப்பாக்கம் அருகே சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்