மும்பையில் இருந்து கடத்தி சென்று கர்நாடகத்தில் போதைப்பொருள் விற்ற இந்தி நடிகர் கைது போலீசார் விசாரணை

மும்பையில் இருந்து கடத்தி சென்று கர்நாடகத்தில் போதைப்பொருள் விற்றதாக இந்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் இந்தி-கன்னட திரைஉலகினருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-09-19 22:35 GMT
மும்பை,

மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நாள்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது. மும்பையில் நடிகை ரியா சக்ரவர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னட திரை உலகில் நடிகர்-நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கள், கன்னட திரை உலகில் முன்னணி நடிகைகளாக உள்ள ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ராகிணி, சஞ்சனா உள்பட 14 பேர் மீது பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்ததாக 2 பேரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிஷோர் ஷெட்டி (வயது 30), அக்யுல் நவ்ஷீல் (28) என்பது தெரியவந்தது. அவர்களில் கிஷோர் ஷெட்டி நடன கலைஞரும், இந்தி நடிகரும் ஆவார். அவர், இந்தியில் பிரபுதேவா நடித்த ‘ஏ.பி.சி.டி.’ என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் பெங்களூருவில் தனியார் கன்னட தொலைக்காட்சி நடத்திய நடன போட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார்.

கைதாகி உள்ள கிஷோர் ஷெட்டி, மும்பையில் இருந்து எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி சென்று கர்நாடக மாநிலம் பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்புடைய அவர், பெங்களூருவில் கன்னட நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அத்துடன் இந்தி திரைஉலகில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கும் அவர் போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தனியார் கன்னட தொலைக் காட்சியில் தொகுப்பாளினியாக உள்ள நடிகை ஒருவர் சமீபத்தில் மங்களூருவில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதும், அந்த விருந்து நிகழ்ச்சிக்கு கிஷோர் ஷெட்டி போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரியவந்தது.

கைதான நவ்ஷீல், வெளிநாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, இந்தி நடிகர் கிஷோர் ஷெட்டியுடன் சேர்ந்து போதைப்பொருட் களை விற்று வந்தது தெரியவந்துள்ளது. கைதான 2 பேருக்கும் யார்-யாருடன் தொடர்பு உள்ளது?, கன்னடம் மற்றும் இந்தி நடிகர்-நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்தார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்