திருச்சியில், ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை- மன உளைச்சல் தான் காரணம் என கடிதம்
திருச்சியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சல்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்ற கடிதம் சிக்கியது.
கே.கே.நகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் அழகர்சாமி (வயது 33). இவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் மோப்பநாய் பிரிவில் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு போலீஸ்காரராக பயிற்சியில் சேர்ந்தார். திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். அழகர்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
வழக்கமாக அவர் காலையில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், நேற்று வெகுநேரமாகியும் அவர் பயிற்சிக்கு வரவில்லை. இதனால், வீட்டில் அழகர்சாமி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என உடன் பணியாற்றும் சக போலீஸ்காரர்கள் பார்க்க சென்றனர்.
வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு அவர், மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரர் அழகர்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அழகர்சாமி வசித்த வீட்டில் அவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை முடிவை எடுக்கிறேன்‘ என கூறப்பட்டிருந்தது.
இதன் மூலம் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் அழகர்சாமிக்கு 33 வயதாகியும் இன்னமும் திருமணம் ஆகவில்லை. எனவே, திருமணம் ஆகாத ஏக்கத்தால் உயிரை மாய்த்து கொள்ளும் முடிவை எடுத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.