கிசான் திட்ட முறைகேடு: திருவலம் கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் கைது
வேலூர் அருகே கம்ப்யூட்டர் மையம் நடத்தி பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.
வேலூர்,
பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் விவசாயிகளுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களில் ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்களில் 3,242 பேர் தகுதியில்லாதவர்கள் என்பதும், ரூ.1 கோடியே 23 லட்சம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தகுதியற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுவரை ரூ.70 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த 8 தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் கொண்ட பட்டியலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி.யிடம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் காட்பாடியை அடுத்த திருவலத்தில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த சந்தோஷ் (வயது 40) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் என்பதும், தனது மாமனார் வீட்டில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.