திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 14 நாட்டுத்துப்பாக்கிகள்

திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் வீசப்பட்ட 14 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-18 05:33 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, ஆடலூர், தாண்டிக் குடி மற்றும் கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் காட்டெருமைகள், பன்றிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. அதில் சிலநேரம் விவசாயிகளும் உயிரிழந்து விடுகின்றனர்.

இதனால் விவசாயிகள் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அதேநேரம் உரிமம் பெறாமல் அனுமதியின்றி ஒருசிலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்போரை கைது செய்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.

14 துப்பாக்கிகள்

இதைத்தொடர்ந்து சந்தேகத்துக்கு உரிய கிராமங் களில் போலீசார், வனத்துறையினர் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை திண்டுக் கல்லை அடுத்த தவசிமடை அருகே நொச்சிஓடைப்பட்டியில் வனப்பகுதியில், துப்பாக்கி கள் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, வனப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் 14 நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்டு கிடந்தன. அவை அனைத்தும் உரிமம் பெறாதவை ஆகும். இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எச்சரிக்கை

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கூறுகையில், நத்தம், சிறுமலை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் சோதனை நடத்தப்படும். அதில் யாராவது, உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக் கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்