கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு முதல்-மந்திரிக்கு, தேவேந்திர பட்னாவிஸ் கடிதம்

கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு, தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் மூலம் கூறியுள்ளார்.

Update: 2020-09-17 23:03 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

நான் முன்பே இந்த பிரச்சினை குறித்து குரல் எழுப்பினேன். ஆனால் இதுகுறித்து அரசு எந்த அடியும் இதுவரை எடுத்து வைத்ததாக தெரியவில்லை. கொரோனா மையத்தில் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ஒரு டஜன் எண்ணிக்கையிலான பெண்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும் மாநிலத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து குறைந்தது 7 பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திஷா சட்டம் கொண்டுவரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதி தற்போது குளிர்விக்கப்பட்ட அறையில் முடங்கிக்கிடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்