குடும்ப பிரச்சினையில், தொழிலாளியை வெட்டிக்கொன்ற உறவினர் - வத்திராயிருப்பு அருகே பயங்கரம்

வத்திராயிருப்பு அருகே குடும்ப பிரச்சினையில் அரிவாளால் தொழிலாளியை வெட்டிக்கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-17 10:45 GMT
வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் தவசிகுமார் (வயது23). கூலித்தொழிலாளி. இவருடைய சகோதரி ஈஸ்வரிக்கும், அவரது கணவர் முருகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதையடுத்து தவசிகுமார், அவரது சகோதரி ஈஸ்வரிக்கு ஆதரவாக முருகனிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று தவசிகுமார், ஈஸ்வரி அம்மன் கோவில் பின்புறம் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த முருகனின் தம்பி மகன் சுந்தரமூர்த்தி (28) என்பவர் எனது சித்தப்பா முருகனிடம் ஏன்? தகராறு செய்தாய் என்று கேட்டு தவசிகுமாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தவசிகுமாரின் மார்பில் அரிவாளால் வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்