பெண்ணாடம் அருகே, ரெயில் தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் வாலிபர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
பெண்ணாடம் அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே இறையூர் காந்திநகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). கேரளாவில் கூலி வேலை செய்து வந்த இவர் கொரோனோ வைரஸ் காரணமாக தனது சொந்த ஊருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை பெண்ணாடம் ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை மட்டும் நசுங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தது கிருஷ்ணமூர்த்தி என்று தெரிந்தது. இதையடுத்து அவரை உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் தலையை நசுக்கி கொலை செய்து விட்டு தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வாலிபர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.