சேத்தூர் அருகே, நோய் தாக்குதலால் தக்காளியில் மகசூல் குறைவு - விவசாயிகள் கவலை

சேத்தூர் அருகே நோய் தாக்குதலால் தக்காளியில் மகசூல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2020-09-12 22:15 GMT
தளவாய்புரம்,

சேத்தூர், தேவதானம், சொக்கநாதன்புத்தூர், அசையா மணிவிளக்கு, முகவூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது தக்காளி காய் காய்க்கும் தருணத்தில் உள்ளது. இந்தநிலையில் தற்போது இந்த பகுதியில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து முகவூர் பகுதியை சேர்ந்த விவசாயி மலைக்கனி கூறியதாவது:-

சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது தக்காளியை சாகுபடி செய்துள்ளோம். இந்த தக்காளி காய்க்கும் தருணத்தில் உள்ளது. நான் ஒரு ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்துள்ளேன்.

இந்தநிலையில் தற்போது பெய்த மழையினால் நோய் மற்றும் புழுக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் தக்காளி அழுகும் நிலையில் உள்ளது. நோய் தாக்குதலினால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை.

வழக்கமாக ஒரு ஏக்கரில் 400 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது நோய் தாக்குதல் காரணமாக தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது 70 கிலோ தான் மகசூல் கிடைத்துள்ளது. இதனால் சாகுபடிக்கு செலவழித்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்