திருத்தணி, பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையங்களுக்கு சைக்கிளில் சென்று டி.ஐ.ஜி. சைலேந்திர பாபு ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணமாக திருத்தணி நகருக்கு வந்தார். அதன் பின்னர், தீயணைப்பு நிலையத்துக்கு வந்த அவர், அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, மழைக்காலங்களில் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்பது குறித்து நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரம் தீயணைப்பு வீரர்களுக்கு உடல் வலிமை, மன வலிமையுடன் போராட வசதியாக வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் சைக்கிளில் புறப்பட்டு பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அங்கு ஆய்வில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஆர்.கே.பேட்டை வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புறப்பட்டு சென்றார்.