இங்கிலாந்து தொழில்நுட்ப உதவியுடன் நெசப்பாக்கம், பெருங்குடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்-சென்னை குடிநீர் வாரியம் திட்டம்
இங்கிலாந்து தொழில்நுட்ப உதவியுடன் நெசப்பாக்கம், பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை,
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்காக கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொழிற்சாலைகளுக்கு தேவையான அளவு வழங்கப்படுவதால், ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் முழுமையாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாட்டை சென்னை குடிநீர் வாரியம் ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரை தொடர்ந்து நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான மாதிரி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தலா 10 மில்லியன் லிட்டர் கழிவு நீர் தினசரி சுத்திகரிப்பு செய்யும் திறனுடன் இந்த புதிய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகளில் விடப்பட உள்ளது. இந்த ஏரிகளில் இருந்து மீண்டும் எடுக்கப்படும் நீர் குடிநீர் வினியோகம் செய்வதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யப்பட உள்ளது.
தொழில்நுட்ப உதவி
இந்த திட்டத்திற்கு டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தொழில்நுட்ப உதவியை வழங்க உள்ளது. திட்டங்களை செயல்படுத்துவதற்காக இங்கிலாந்து தூதரகம் தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சிக்கு உதவ ஒரு வழிகாட்டு குழுவை அமைக்க உள்ளது. ‘மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு’ என்ற 3-ம் நிலை சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் நல்ல தண்ணீரையே நம்பியிருப்பதை குறைப்பதற்கும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் உதவியுடன் நீர் நிலைகளில் தண்ணீரை பெருக்கவும், மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரின் மறைமுக பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
இதற்கிடையே கொடுங்கையூர் மற்றும் கோயம்பேடு நிலையங்களில் உள்ள சுத்திகரிப்பு திறன் 260 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட உள்ளது. இந்த நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையும் இங்கிலாந்து தூதரக வழிகாட்டு குழுவின் தொழில்நுட்ப ஆய்வுக்காக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.