2 டாக்டர்கள் உள்பட 148 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,460 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 2 டாக்டர்கள் உள்பட 148 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 12,460 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-12 06:00 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் பரவல் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறி தென்பட்டவர்களுக்கும், பல்வேறு இடங்களில் முகாம்கள் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பலர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் அறிகுறி தென்பட்டவர்கள், அரசு ஊழியர்கள் என பலர் ஆர்வமுடன் பரிசோதனை செய்து கொண்டனர். மாவட்டத்தில் பரிசோதனை செய்து கொண்டவர்களின் முடிவுகள் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் 148 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர சிறு வணிகர்கள், ஓட்டலில் பணியாற்றுவோர், விடுதியில் பணியாற்றுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சத்துவாச்சாரி, சலவன்பேட்டை, வேலப்பாடி, காட்பாடி, விருதம்பட்டு போன்ற மாநகராட்சி பகுதிகளில் சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12,460-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்