கொடைக்கானல் செல்ல அனுமதி அளித்ததை போல் தனுஷ்கோடி சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு அனுமதி அளித்ததை போன்று தனுஷ்கோடி சுற்றுலாவுக்கும் அனுமதி அளிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2020-09-11 22:00 GMT
ராமேசுவரம்,

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதனால் கடந்த 5 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளும், சுற்றுலா வாகனங்களும் அனுமதிக்கப்படாததால் எம்.ஆர்.சத்திரம், கம்பிபாடு மற்றும் அரிச்சல்முனை சாலைவரையில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அரசு அனுமதி வழங்கவில்லை.

இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும், ராமநாதபுரம் மாவட்ட மக்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்