புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது மேலும் 12 பேர் உயிரிழப்பு

புதுவையில் கொரோனாவுக்கு 12 பேர் பலியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது.

Update: 2020-09-11 22:08 GMT
புதுச்சேரி,

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதிதாக 504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 394 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாகூரை சேர்ந்த 88 வயது முதியவர், நைனார்மண்டபம் வள்ளலார் நகரைச் சேர்ந்த 44 வயது ஆண், வடமங்கலம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 74 வயது முதியவர், கொசப்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த 53 வயது ஆண், திப்புராயப்பேட்டையை சேர்ந்த 40 வயது ஆண், இந்திராநகர் கங்கை வீதியை சேர்ந்த 65 வயது முதியவர், சண்முகாபுரத்தை சேர்ந்த 60 வயது முதியவர், முத்தியால்பேட்டை மஞ்சினி நகரை சேர்ந்த 46 வயது ஆண் ஆகியோரும் உயிரிழந்தனர்.

ஜிப்மரில் கல்மேடுபேட்டை சேர்ந்த 51 வயது ஆண், அரும்பார்த்தபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த 53 வயது முதியவர் ஆகியோரும், கோவிந்தசாலை பாரதிபுரத்தை சேர்ந்த 64 வயது முதியவர், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 70 வயது முதியவர் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்தோர்

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 92 ஆயிரத்து 904 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களில் 71 ஆயிரத்து 196 பேருக்கு தொற்று இல்லை. 19 ஆயிரத்து 26 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 878 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அதாவது 1,742 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 136 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 ஆயிரத்து 783 பேர் குணமடைந்துள்ளனர். 365 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 311 பேர் புதுச்சேரியையும், 20 பேர் காரைக்காலையும், 34 பேர் ஏனாம் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். மாகியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை.

புதுவை மாநிலத்தில் உயிரிழப்பு 1.92 சதவீதமாகவும், குணமடைவது 72.44 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்