பண்ருட்டி அருகே பயங்கரம்: தொழிலாளி குத்துவிளக்கால் அடித்துக் கொலை - கோவில் பூசாரி உள்பட 6 பேரிடம் போலீஸ் விசாரணை
பண்ருட்டி அருகே தொழிலாளி குத்துவிளக்கால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவில் பூசாரி உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடு மேட்டுக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் ரவி (வயது 43), கூலித் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், விஜயகுமார், விஜயபாரதி ஆகிய மகன்களும், பிரதீபா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ரவி மதுவுக்கு அடிமையானதோடு, சரி வர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதேஊரில் முந்திரி தோப்பில் உள்ள நொண்டிவீரன் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரவி அங்கு குடிபோதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ரவி நொண்டி வீரன் கோவில் முன்பு தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவியின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மர்மநபர் யரோ கோவிலில் இருந்த குத்துவிளக்கை எடுத்து ரவி தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நொண்டி வீரன் கோவில் பூசாரி உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.