குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-09-11 05:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி அழகப்பாபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு உட்பட்ட பொன்நகர். இங்கு செல்லும் அழகப்பாபுரம் விநாயகர் கோவில் சாலை மிகவும் பிரதான சாலையாகும். இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. மேலும் மழை நேரத்தில் இந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் இதில் சிக்கி கீழே விழுந்து செல்லும் நிலை இருந்து வந்தது.

இதையடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை இன்னும் சீரமைக்கப்படாததால் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து அலுவலகம் முன்பு கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை நகராட்சி அலுவலர்களிடம் வழங்கினர். விரைவில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்