கர்நாடகாவில் இருந்து தளி வனப்பகுதிக்கு வந்த 50 யானைகள் - விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கர்நாடகாவில் இருந்து தளி வனப்பகுதிக்குள் 50 யானைகள் வந்துள்ளதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Update: 2020-09-10 22:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஓசூர் ஆகிய வனப்பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வனப்பகுதிக்குட்பட்ட பேலகரை காப்புக்காட்டிற்கு நேற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின்பேரில் தளி வனச்சரகர் நாகராஜ், வனவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தளி வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து இந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர் அதற்கான பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காட்டுயானைகள் கூட்டம் தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அருகில் உள்ள பேலகரை, கும்ளாபுரம், கங்கனப்பள்ளி, அளேவூர், கும்மாளஅக்ரஹாரம், உனுசேநத்தம், மல்லேஷ்வரம், தேவரப்பெட்டா உள்ளிட்ட கிராமங்களில் வாழும் கிராமமக்கள் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேவையில்லாமல் இரவு நேரங்களில் வெளியே சுற்றித்திரியக்கூடாது. விவசாய தோட்டங்களில் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த காட்டுயானைகள் கூட்டம் தளி வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதிக்குள் நுழைந்தால் வனப்பகுதியை ஒட்டி விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, நெல், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்று அழித்துவிடும். எனவே காட்டுயானைகள் கூட்டத்தை கர்நாடகாவிற்கே மீண்டும் விரட்டி, விவசாயிகள் மற்றும் கிராமமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்