பெரம்பலூரில், தனியார் நிறுவனங்களில் 107 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
பெரம்பலூரில் தனியார் நிறுவனங்களில் இருந்து 107 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த கடைகளுக்கு தனியார் நிறுவனங்கள், புகையிலை பொருட்களை வினியோகம் செய்வதாகவும், திருச்சி அமைப்பு ரீதியான குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அமைப்பு ரீதியான குற்ற புலனாய்வுத்துறையினர், பெரம்பலூரில் காமராஜர் வளைவு மற்றும் எளம்பலூர் சாலை பகுதிகளில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் ஏஜென்சிகளில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காமராஜர் வளைவு அருகே தனியார் மார்க்கெட்டிங் ஏஜென்சி நடத்தி வரும் சோனாராம் என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 22) மற்றும் எளம்பலூர் சாலையில் தனியார் மார்க்கெட்டிங் ஏஜென்சி நடத்தி வரும் குமார் (55) ஆகியோரின் ஏஜென்சி அலுவலகங்களில், வெளிச்சந்தை விற்பனைக்கு அனுப்புவதற்காக மூட்டைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 107 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் குமாரின் நிறுவனத்தில் இருந்து 86 கிலோ புகையிலை பொருட்களும், பிரவீன்குமாரின் நிறுவனத்தில் இருந்து 21 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக பிரவீன்குமார், குமார் ஆகியோரை குற்றப்புலனாய்வு துறையினர் பிடித்து, பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். புகையிலை பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், குமார் ஆகியோரை பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.