‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்த மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்

‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்கினார்.

Update: 2020-09-10 22:30 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விக்னேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று எலந்தங்குழி கிராமத்திற்கு வந்தார். அவரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் போலீஸ் பாதுகாப்புடன், விக்னேசின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு விக்னேசின் பெற்றோரை, உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விக்னேசின் குடும்பத்தினருக்கு, கட்சியின் சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவியாக வழங்கினார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது;-

‘நீட்’ தேர்வால் ஆண்டுதோறும் மாணவர்கள் உயிரிழப்பது குறித்து தமிழக அரசுக்கு அக்கறை இல்லாமல் உள்ளது. டாஸ்மாக் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் செல்லாதது ஏன்?. மத்திய அரசுக்கு அடிமை அரசாக தமிழக அரசு உள்ளதால், இந்த நிலைமை நீடித்து வருகிறது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், இதுவரை ஆளும் அரசு செவி சாய்க்காதது மக்கள் மீது அக்கறை இன்மையையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து, பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த விக்னேசின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்கிருந்த அவருடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதி போதாது. ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். ‘நீட்’ தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது வேதனை அளிக்கிறது. ‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக அரசு, மத்திய அரசிடம் அழுத்தம் தர முன்வர வேண்டும். மாணவர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை எடுத்து கொண்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

பின்னர் எலந்தங்குழி கிராமத்திற்கு சென்று உறவினர்களை சந்திக்க தொல்.திருமாவளவன் எம்.பி., போலீஸ் அதிகாரியிடம் அனுமதி அளிக்க கோரினார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர், விக்னேசின் பெரியப்பா மகன் சக்திவேலுவிடம் ரூ.25 ஆயிரத்தை நிதி உதவியாக வழங்கி விட்டு, அவரது சொந்த ஊரான அங்கனூருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக மாணவர் விக்னேஷ் உடலுக்கு, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்