கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்பா? கோவை நகைப்பட்டறை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை - 32 பவுன் நகை-பணம் பறிமுதல்

கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் கோவை நகைப்பட்டறை உரிமையாளரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் 32 பவுன் நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-09-10 14:30 GMT
கோவை,

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 130 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்தனர். இதில் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக இருந்தபோதுதான் குற்றச்சாட்டில் சிக்கினார். மேலும் தங்க கடத்தல் வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிலரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவை பவிழம் வீதியில் நகை பட்டறை நடத்தி வரும் நந்தகோபால் (வயது 42) என்பவருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சூப்பிரண்டு சாகுல் அமீது தலைமையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்றுக்காலை கோவை வந்தனர். அவர்கள் காலை 6 மணி முதல் நந்தகோபால் நகை பட்டறை மற்றும் அதன் முதல் தளத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

கோவையில் நகை பட்டறை நடத்தி வரும் நந்தகோபால் மும்பையை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். பின்னர் விடுதலையாகி வந்த அவர் கோவையில் தங்க கட்டி வியாபாரமும், சொந்தமாக நகை பட்டறை நடத்தியதும் தெரிய வந்தது.

மேலும் அவர் கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களிடம் இருந்து தங்க கட்டியை பெற்று அதை நகைகளாக செய்து கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்து 32 பவுன் நகை மற்றும் ரூ.2¾ லட்சம் ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையை அடுத்து அவரது வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நந்தகோபால் வீடு மற்றும் நகை பட்டறைகளில் சோதனை முடிந்ததும் அவரை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாலையில் அவரை கேரள மாநிலம் கொச்சிக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு அவரை கைது செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்