தர்மபுரி மாவட்டத்தில், டாக்டர்கள் உள்பட 85 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 டாக்டர்கள் உள்பட 85 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 4 டாக்டர்கள் உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயது டாக்டர், 44 வயது டாக்டர், தர்மபுரியை சேர்ந்த 31 வயது பெண் டாக்டர், நெசவாளர் காலனியை சேர்ந்த 60 வயது டாக்டர் ஆகியோருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தர்மபுரியை சேர்ந்த 11 வயது சிறுமி, அன்னசாகரத்தை சேர்ந்த 35 வயது போலீஸ்காரர், காரிமங்கலத்தை சேர்ந்த 50 வயது போலீஸ்காரர், பாலக்கோட்டை சேர்ந்த 40 வயது போலீஸ்காரர் அரூரை சேர்ந்த 28 வயது தபால் துறை ஊழியர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 25 வயது மாணவர், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 39 வயது மருத்துவ பணியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல் பொம்மஅள்ளியை சேர்ந்த 20 வயது கொண்ட 2 மாணவர்கள், ஜிட்டாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் தூய்மை காவலர், திம்மராயஅள்ளியை சேர்ந்த 47 வயது பெண் தூய்மை காவலர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. தர்மபுரியை சேர்ந்த 32 வயது பெண் செவிலியர், இண்டூரை சேர்ந்த 32 வயது வங்கி மேலாளர் ஆகியோர் உள்பட தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,586 ஆக உயர்ந்து உள்ளது.