மயிலாடுதுறை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை: முன்னாள் ராணுவ வீரர், மகனுடன் கைது - உறவினரும் பிடிபட்டார்

மயிலாடுதுறை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுடன் கைது செய்யப்பட்டார். மேலும் குடவாசலை சேர்ந்த உறவினரும் போலீஸ் பிடியில் சிக்கினார்.

Update: 2020-09-10 09:30 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் தாலுகா கப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன்(வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கோதை(47). இவர்களுடைய மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவி(58). இவருடைய மகள் இலக்கியா.

இலக்கியாவை, கார்த்திக் காதலித்தார். இவர்களின் காதலை ரவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த இலக்கியா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவுக்கு கார்த்திக் தான் காரணம் என கருதிய ரவி அவரை கொலை செய்ய தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.

சம்பவத்தன்று மதிவாணன் வீட்டுக்கு ரவி மற்றும் அவருடைய மகன் ஸ்ரீராம், உறவினர் சதீஷ்குமார் ஆகியோர் சென்றனர். அப்போது வீட்டில் கார்த்திக் இல்லை. இதனால் ரவி, ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டில் இருந்த மதிவாணன், அவரது மனைவி பூங்கோதை ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பூங்கோதையின் கை துண்டானது. உடனே சம்பவ இடத்தில் இருந்து ரவி உள்பட 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவி உள்பட 3 பேரும் மங்கைநல்லூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவி, அவரது மகன் ஸ்ரீராம்(28), உறவினர் குடவாசலை சேர்ந்த சதீஷ்குமார்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்து சீர்காழி கோர்ட்டில் அஜர்படுத்தி சீர்காழி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்