பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம்; ரூ.30 லட்சம் மீட்பு - திருவாரூரில் இதுவரை 2,383 வங்கி கணக்குகள் முடக்கம்
பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2,383 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்,
பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் ஏழை, எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வேளாண்மைத்துறை மூலம் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள், விவசாயிகள் என்ற போலியான ஆவணங்கள் மூலம் இணைந்து தமிழகம் முழுவதும் மோசடி நடந்து இருப்பது குறித்து கண்டறிய மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் தகுதியில்லாதவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்திலும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் பட்டியலை கொண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 59 ஆயிரம் விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர்.
இதில் 9 ஆயிரம் விவசாயிகளின் பட்டியல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் கோவில் நிலத்தவர்கள், சாகுபடிதாரர்கள் என 3 ஆயிரம் பேர் தகுதி இல்லாதவர்களாக கண்டறியப்பட்டு அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை ரூ.30 லட்சம் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பிரமரின் நிதி உதவி திட்டத்தின் பயன் அடைந்தவர்கள் பட்டியலைக்கொண்டு வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தவறான தகவல்களை கொடுத்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தகுதியற்ற 2,383 பேரை பயனாளிகளாக சேர்்ந்து நிதி உதவியை பெற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்படி அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மேலும் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் தலைமையில் வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தகுதியற்ற பயனாளிகள் வங்கி கணக்கில் பெற்ற ரூ.13 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.