தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

Update: 2020-09-09 22:36 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,394 ஆண்கள், 2,190 பெண்கள் என மொத்தம் 5,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 219 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 650 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 993 பேரும், கோவையில் 445 பேரும், கடலூரில் 344 பேரும், சேலத்தில் 279 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 15 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 53 லட்சத்து 66 ஆயிரத்து 224 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 777 ஆண்களும், 1 லட்சத்து 90 ஆயிரத்து 718 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 21 ஆயிரத்து 305 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 62 ஆயிரத்து 739 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

78 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 57 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேரும் என 78 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், கோவையில் 6 பேரும், கிருஷ்ணகிரி, திருச்சியில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் தலா 4 பேரும், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், கடலூர், காஞ்சீபுரம், தென்காசி, திருவாரூரில் தலா 2 பேரும், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 28 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 8,090 பேர் உயிரிழந்துள்ளனர்.

6,516 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 516 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,154 பேரும், சேலத்தில் 588 பேரும், கோவையில் 580 பேரும், செங்கல்பட்டில் 380 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 49 ஆயிரத்து 203 பேர் மட்டுமே உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 879 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 204 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்