அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் வசதி

அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில், முதல் நிலை கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-09 22:33 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் டாக்டர்களின் வழிகாட்டுதலின்படி, வீட்டில் சுய கண்காணிப்பில் இருக்க உதவியாக தமிழக அரசு சார்பில் அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தங்களது உடல்நிலையை கண்காணிக்க தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் நிலையில் இருப்பவர்களுக்கு மிக குறைவான அறிகுறியும், அறிகுறி இல்லாமலும் இருக்கின்றனர். 2-வது நிலையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும். இதற்காக தேவையான படுக்கை வசதிகள் தயாராக இருந்து வருகிறது.

மேலும் 3-வது நிலையில் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான பாதிப்புக்கு ஆளாகியவர்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வெண்டிலேட்டர்கள் தமிழக மருத்துவமனைகளில் தயாராக உள்ளது.

வீட்டு கண்காணிப்பு

முதல் நிலையில் இருப்பவர்களில் பலர் தங்களது வீடுகளில் இருந்தே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் மருத்துவ அறிவுரைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. 4 நாட்களில் உடல்நிலை சிறிது தேறியதும் மருத்துவ அறிவுரைகளை கடைபிடிக்க தவறுகின்றனர். இதனால் சிறிது நாட்களில் கொரோனா பாதிப்பு அவர்களுக்கு தீவிரமடைகிறது. அதையடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி வீட்டு கண்காணிப்பில் இருந்து வருகிறவர்கள் முறையாக தங்களது சுய கண்காணிப்பை கடைபிடிக்க தேவையாக ரூ.2,500 மதிப்பில் அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்களிடம் பெற முடியும்.

உளவியல் ஆலோசனை

மேலும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் உடல் நிலை குறித்து தினமும் காணொலி காட்சி மூலம் சுகாதார ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பெட்டகத்தில், பல்ஸ் ஆக்சி மீட்டர், காய்ச்சல் சோதனை செய்யும் கருவி, தேவையான வைட்டமின் மாத்திரைகள், இந்திய மருத்துவ பொருட்கள், முக கவசம் உள்ளிட்டவைகள் இருக்கும். மேலும் யோகா மற்றும் இயற்கை வைத்திய டாக்டர்களின் அறிவுரைகளும், உளவியல் ஆலோசனையும் வழங்கப்படும்.

வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் தினமும் சுகாதார பணியாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவைகளை சோதனை செய்து கொள்ளலாம். மேலும் அவர்களது உடல்நிலை குறித்து உடனடியாக டாக்டர்கள் ஆலோசனை பெறப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகள், தேவைப்பாட்டால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டில் இருந்து சிகிச்சை

மேலும் இந்த திட்டத்தில் டாக்டர்கள் வழங்கும் மருந்துகளை வீட்டுக்கு வரும் சுகாதாரப்பணியாளர்கள் உதவியுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் மருத்துவ ஆலோசனை மட்டுமில்லாமல், உளவியல், உணவு பழக்கங்கள் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் பயன்பெற பொதுமக்கள் 7338835555 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்