ராமநாதபுரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு பற்றி விசாரிக்க பா.ஜனதா மனு

ராமநாதபுரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-09-09 14:45 GMT
ராமநாதபுரம்,

பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு நடந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுதொடர்பாக விசாரித்து முறைகேடு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் பா.ஜ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் முரளிதரன் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பிரதம மந்திரியின் வேளாண்மை உதவி திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு மோசடிய நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் அல்லாதவர்கள் இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து இருப்பதாகவும் இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசின் பணம் முறைகேடாக மோசடி செய்யப்பட்டுஉள்ளதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு மோசடி நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தீவிரமாக விசாரிப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்