வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம் - இன்றுமுதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-09 13:00 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணிக்குள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், கலெக்டர் பிரவீன் நாயர், போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் இன்று(புதன்கிழமை) முதல் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வர வெளிமாநிலம், வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேராலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்